Ponmagal Vandhal - Movie Review


தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் OTT க்கு ஆரம்பமாய் இன்று பொன்மகள் வந்தாள் வெளியாகியுள்ளது. 


கதை சுருக்கம்

ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.

இவை அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண் தான் என கூறி போலிசாரே அவரை கொல்கின்றனர்.

நீண்ட நாட்கள் கழித்து ஜோதி தவறு செய்யவில்லை என்று பாக்யராஜ் இந்த வழக்கை மீண்டும் எடுக்க, பாக்யராஜ் மகள் ஜோதிகா இந்த வழக்கை எடுத்து நடத்துகிறார்.

ஜோதிக்கும் ஜோதிகாவிற்கும் என்ன தொடர்பு, அவர் ஏன் இந்த வழக்கை எடுக்க வேண்டும், எடுத்த வழக்கை வெற்றிகரமாக முடித்தாரா? என்பதே மீதிக்கதை. 

விமர்சனம்

படம் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தோடு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ப்ரட்ரிக். மெசேஜ் சொல்வது போல் அமைக்கப்படும் கதைகளை இவ்வளவு விறுவிறுப்பாக எடுத்துச் செல்வது என்பது சாதாரணமான காரியம் இல்லை. எந்த இடத்திலும் தொய்வின்றி திரைக்கதை செல்கிறது. 

கோவிந் வசந்தாவின் பிண்ணனி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் கதையோடு ஒட்டி இருக்கிறது. இயக்குநர் ரூபன் எடிட்டிங் இன்னொரு பலமென்றே சொல்லலாம். 

ஊட்டியின் அழகை படத்தின் Mood ஐயும் ஒன்று சேர்த்து காட்சிகளுக்கு அழகூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. 

36 வயதினிலே மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா , அதன் பிறகு ஆறேழு படங்களில் நடித்திருந்தாலும், பொன்மகள் வந்தாளில் ஜோதிகாவின் நடிப்பில் ஒரு பெரிய மெச்சூரிட்டி தெரிகிறது. எமோஷனலான காட்சிகளில் கலங்க வைக்கிறது ஜோதிகாவின் நடிப்பு. அதே சமயம் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளிலும் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார் ஜோ. 

பார்த்திபன் நடிப்பு, அவரது வசனங்கள் எல்லாம் அவ்வளவு இயல்பாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. பாக்கியராஜ் நடித்த கதாப்பாத்திரங்களில் தன்னுடைய இயல்பான உடல் மொழியை தவிர்த்து ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், வினோதினி என ஒவ்வொருவரும் அசால்ட்டாக நடித்திருக்கிறார்கள். 

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் சற்று குறைந்துள்ளதை தவிர வேறு எந்த குறையும் இல்லை. பொன்மகள் வந்தாள் - குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம். 

Rating - 4/5


Available in Amazon Prime. 




Post a Comment

0 Comments