குழந்தைகளுக்கான தமிழ் தாலாட்டு பாடல்கள்



1. ஆராரோ ஆரிரரோ...!

ஆராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்

கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்

கற்பகத்தைத் தொட்டாரார்

தொட்டாரைச் சொல்லியழு

தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடிச்சாரைச் சொல்லியழு

ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ

மல்லி பூ செண்டாலே

அண்ணன் அடித்தானோ

ஆவாரங் கொம்பாலே

பாட்டி அடித்தாளோ

பால் வடியும் கம்பாலே

ஆராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்

கண்மணியே கண்ணுறங்கு....



2. உசந்த தலைப்பாவோ...

உசந்த தலைப்பாவோ

'உல்லாச வல்லவாட்டு'

நிறைந்த தலை வாசலிலே

வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்

பட்டினியாப் போராண்டா

பட்டினியாய் போற மாமன்-உனக்கு

பரியம் கொண்டு வருவானோ?


3. பச்சை இலுப்பை வெட்டி...

பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டிலிட்டு

பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு

கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ

சித்திரப் பூந்தொட்டிலிலே

சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ

சித்திரப் பூந் தொட்டிலிலே.


4. தாய்மாமன் பாடல்

பால் குடிக்கக் கிண்ணி,

பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி,

முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி

கொண்டு வந்தான் தாய்மாமன்.


5. கனியமுதே நீ உறங்கு...

ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ

புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ

முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ...

முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..

கண்ணே கண்ணுறங்கு

கனியமுதே நீ உறங்கு....


6. தாய்மாமன் - தாலாட்டு பாடல்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்

சேனைக் கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு

சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்

பல வர்ணச் சட்டைகளும்

பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு

கட்டிக் கிடக் கொடுத்தானோ!

பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு

மின்னோலைப் புஸ்தகமும்

கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே

கவிகளையும் கொடுத்தானோ !



Post a Comment

0 Comments